கடலோரத்தில் ஓர் ஆன்மிக சுற்றுலாத்தலம்

திருச்செந்தூர் – முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். கடற்கரையோரம் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் தான். திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து ரயில் அல்லது பஸ் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் திருச்செந்தூர் சென்றடையலாம். இங்கு சூரசம்ஹாரம் திருவிழாவின்போது சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள். மூலவரை தரிசிக்க தினமும் காலை 11 மணிக்கு சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படும் பகுதிக்கு கட்டணமின்றி அனைவரும் செல்லலாம். இங்குள்ள நாழிக்கிணற்றில் குளித்த பின்பே கடலில் நீராட வேண்டும். திருச்செந்தூர் கடலில் பல புண்ணிய நதிகள் கலந்துள்ளன என்பது ஐதீகம். ஆனால், சில பக்தர்கள் கடல்நீர் உப்பாக உள்ளது என்று கூறி கடலில் குளித்துவிட்டு நாழிக்கிணற்றில் குளிக்கின்றனர். இது சரியான முறையல்ல என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். இக்கோயில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கந்த சஷ்டி திருவிழா நேரத்தில், தங்களது விளைநிலத்தின் அறுவடை தானியங்களை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவது இக்கோயிலில் வழக்கமாக உள்ளது. மேலும், கரும்புக் காவடி எடுத்தால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. திருவிழாக் காலம் இல்லாத நாட்களிலும் பல ஊர்களில் இருந்து இங்கு பாதயாத்திரையாக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருசெந்தூர் வருபவர்கள் அருகேயுள்ள குலசேகரப்பட்டினம் அம்மன் கோயில், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கிருஷ்ணாபுரம் கலைக்கோயில் ஆகிய இடங்களுக்கும் சென்று வரலாம். திருச்செந்தூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. திருக்கோயில் சார்பில் தனியறைகளும் மண்டபங்களும் குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. செந்திலாண்டவர் விருந்தினர் விடுதியில் சொகுசு அறைகளும் உள்ளன. அறைகளை இணையதளம் மூலமும் முன்பதிவு செய்யும் வசதியுள்ளது. திருக்கோயிலின் நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 04639-242221, 04639-242270, 04639-242271 இணையதளம்: http://www.tiruchendurmurugantemple.com

My Twitter Link

http://twitter.com/subbarayarpuram