திட்டமிட்டபடி டைட்டானியம் தொழிற்சாலை-டாடா

சென்னை:

திட்டமிட்டபடி சாத்தான்குளத்தில் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்கப்படும் என டாடா நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று சென்னையில் அவசரமாகக் கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய டாடா ஸ்டீல் நிறுவன தலைவர்  முத்துராமன் கூறுகையில்,

ரூ. 2,500 கோடி மதிப்பிலான டைட்டானியம் டை ஆக்ஸைடு திட்டம் இது. இத் திட்டத்தை மக்களின் ஆதரவோடு செயல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறோம். அங்கே சிலர் சட்ட விரோதமாக டைட்டானியம் டை ஆக்ஸைடை கடத்தி விற்கிறார்கள் என்பதற்காக இத் திட்டத்தை கைவிட்டுவிட முடியாது.

இத் திட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கவுள்ளோம். இதன் நலன்களை எடுத்துச் சொல்வோம். வேகமாக இத் திட்டத்தை அமலாக்க விரும்புகிறோம்.

இத் திட்டத்தால் 1,000 பேருக்கு நேரடியாகவும் 3,000 பேருக்கு மறைமுகமாகவம் வேலை கிடைக்கும்.

டைடானியம் ஆலையை எதிர்க்கும் சாத்தான்குளம் மக்களை ஜாம்ஷெட்பூர், ஒரிஸ்ஸாவுக்கு அழைத்துச் சென்று டாடா ஆலைகளைக் காட்டவும் அங்குள்ள மக்களுடன் பேச வைக்கவும் தயாராக இருக்கிறோம். டாடா ஆலையால் ஜாம்ஷெட்பூர், ஒரிஸ்ஸா அடைந்த பலன்களைக் காட்டினால் மக்கள்  மனதில் உள்ள தவறான கருத்து விலகிவிடும்.

இதற்காக குழுக்களை அமைத்து மக்களுடன் பேச வைக்கப் போகிறோம்.

சாத்தான்குளம் பகுதி மண்ணில் கிடைக்கும் சிந்தடிக் ருடைல் தாதுவை பயன்படுத்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதை இப்போது இறக்குமதி தான் செய்து வருகிறோம். ஆந்திரா  , ஒரிஸ்ஸா, கேரளாவிலும் இந்தத் தாது கிடைத்தாலும் அங்கு நிலங்களில் விவசாயம் நடக்கிறது. சாத்தான்குளம் பகுதியில் தான் நிலத்தில் விவசாயம் நடக்கவில்லை. இதனால் தான் இந்த இடத்தை தேர்வு செய்தோம்.

இப்போது இந்த நிலங்கள் மூலம் அப் பகுதி மக்களுக்கு ஒரு பலனும் இல்லை. இத் திட்டத்துக்கு 4ல் 3 பகுதி மக்களின் ஆதரவு உள்ளது. ஒரு பகுதியினர் தான் குழப்பம் காரணமாக எதிர்க்கிறார்கள். அவர்களை குழப்புவது வேறு யாருமல்ல, சட்ட விரோதமாக இந்த தாதுவை அள்ளும் நபர்கள் தான்.

மக்களின் நிலத்துக்கு சரியான விலையைக் கொடுப்போம். எந்தப் பயனும் தராத நிலத்தை தான் அவர்கள் எங்களுக்குத் தரப் போகிறார்கள். எங்களுக்கு 10,000 ஏக்கர் நிலம் தேவை. இது 6 கிராமங்களில் பரவியுள்ளது. இதில் 8,929 ஏக்கரில் தொழிற்சாலை அமையும்.

இதில் 7,500 ஏக்கரை பொது மக்களிடம் இருந்து வாங்க வேண்டியுள்ளது. நிலத்தை டாடா நிறுவனம் நேரடியாக வாங்க தயாராக இல்லை. அதில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் உள்ளன. ஒரே நிலத்துக்கு 3, 4 பேர் உரிமை கொண்டாடுவார்கள். அந்த சிக்கலுக்குள் போக நாங்கள் தயாராக இல்லை. அரசின் மூலமே அதை வாங்குவோம்.

3 வருடத்துக்கு முன் நிலத்தின் விலை ஏக்கருக்கு ரூ. 10,000 முதல் 20,000 ஆக இருந்தது. இப்போது தமிழக அரசு விலையை ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை நிர்ணயித்துள்ளதாக அறிகிறோம். நிலத்தை வாங்க மட்டும் ரூ. 50 கோடியை ஒதுக்கியுள்ளோம்.

மக்கள் ஆதரவோடு இத் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறோம். மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் மட்டுமே வேறு இடங்களைத் தேட தயாராக இருக்கிறோம்.

சட்டவிரோத மணல் அள்ளும் கும்பல்களாலும் சில சக்திகளாலும் இந்தத் திட்டத்தை துவங்குவதில் 6 ஆண்டு காலதாமதம் ஆகிவிட்டது. இப்போதும் காத்திருக்க தயாராகவே இருக்கிறோம்.

இந்த சக்திகளை அரசு கவனித்துக் கொள்ளும் என நம்புகிறோம். திட்டத்தை நாளையே தொடங்கவும் நாங்கள் தயார்.

இப் பகுதியினருக்கு ஆலையில் வேலை அளிக்க வசதியாக பயிற்சி மையங்கள் துவக்கப்படும். அதில் 3 வருடம் பயிற்சி தருவோம். நிலம் கொடுக்கும் ஒவ்வொருவரையும் டாடா குடும்பத்தில் ஒருவராக சேர்க்கவே விரும்புகிறோம். ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார நிலையையும் உயர்த்த டாடா உறுதி பூண்டுள்ளது.

இத் திட்டத்தில் ஒளிவு மறைவுக்கே இடமில்லை. இது தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் உதவும் திட்டம். இதற்கு எதிர்ப்பு  வருவது தான் ஆச்சரியமாக உள்ளது என்றார்.

Link to –> டைட்டானியம் தொழிற்சாலை

Advertisements